காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

வெற்றி நிச்சயம் கேள்விகளே சாவிகள்

  

வெற்றி நிச்சயம் கேள்விகளே சாவிகள்!


     *வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் என்றே பலர் கருதுகிறார்கள்.              இதன் வெற்றி, தோல்விகள் அதிர்ஷ்டத்தின் மூலமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் வெற்றி, தோல்விகள் தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல.தேர்வின் முடிவுபோல் தீர்க்கமானவை.


       *வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு என் நல்வாழ்த்துகள் உங்களுக்கு நன்மை உண்டாகட்டும் உங்களால் வீடும் நாடும் விரிந்த உலகமும் நன்மை பெறட்டும் வெற்றிக்கு வழி என்ன ?                      வெற்றி உலகின் மொழி என்ன? சொல்கிறேன்.


    *என்னிடத்தில் உதவிகள் கேட்டுச் சிலர் வருவதுண்டு. அதில் அதிகமான பேர் வேலை வாங்கித் தரும்படித்தான் கேட்பார்கள். "என்ன வேலை?" என்றால், "ஏதாவது வேலை" என்பார்கள். வருத்தப்படாதீர்கள் இவர்கள் வெற்றி பெறுவது கடினம். என்ன வேலை என்கிற தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு வேலை என்றால் நான் அவருக்கு எந்த வேலைக்கு முயற்சி செய்வது? என்னுடைய வேலையைத்தான் அவருக்குத் தரமுடியும்!


   *இது மிக முக்கியமான விசயம் எதை அடைய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருந்தால் தான் அதை நீங்கள் அடைய முடியும்.                      அடைய வேண்டியது எது என்கிற முடிவே இல்லை என்றால் எதை அடையமுடியும்? நமக்கு எது வேண்டும் என்கின்ற தெளிவு இருந்தால்தான் அது கிடைக்கும், கிடைத்தாலும் ருசிக்கும்.  இல்லையென்றால் கிடைக்காது.     கிடைத்தாலும் ருசிக்காது.               காரணம் கிடைத்ததே தெரியாது.


  *ஹோட்டலில் கூட பலபேர் என்ன சாப்பிடுவது என்ற தெளிவேயின்றி மெனுகார்டை (பட்சணப் பட்டியலை) வெறித்து வெறித்தப் பார்ப்பார்கள். எதையும் முடிவு செய்யமாட்டார்கள் இந்தக் குழப்பவாதிகள் முறையாக வெற்றிக் கனியைப் பறிப்பது கடினம். எனவே, வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்.


இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டி நிலை என்ன ? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை ? என என்கிற விழிப்பு நம்முள் தோன்றிவிட்டால் நமக்கு வெற்றி நிச்சயம், எங்கே இருக்கிறோம் ? எங்கே போக வேண்டும் ? எப்படிப் போகப் போகிறோம் என்கிற தெளிவு பிறந்துவிட்டால் வெற்றி நிச்சயம்.


*அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப் கென்னடி  அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மை பார்க்க வந்திருந்த இளைஞர்கள்,     பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார் பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி,               "உன் எதிர்கால லட்சியம் என்ன?"    என்றார் கென்னடி. பளீரென்று பதில் சொன்னான் அந்த மாணவன், "இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இது தான் என் லட்சியம்" என்றான். விழிகளை உயர்த்திவிட்டு, "குட்" என்று வாழ்த்திவிட்டு  கென்னடி நகர்ந்தார்.


*அமெரிக்க ஜனாதிபதியாக ஆவது தான் லட்சியம் என்ற அந்த சிறுவன் பிற்காலத்தில் அப்படியே ஆனான்.  அவன் வேறு யாருமல்ல புகழ்பெற்ற    பில் கிளிண்டன். அவர் எண்ணம் வெறும் ஆசையோ கற்பனையோ அல்ல. தீர்க்கமான தீர்மானம். அதனால் அது நடந்து விட்டது எல்லோருக்கும் இப்படி நடக்குமா? இப்படி நடக்கிறதா? என்று என்னை ஏளனமாகப் பார்க்கும் மூடர்களுக்கு ஒன்று சொல்கிறேன். நம்பிக்கைகள் நடக்காமல் போகும் பட்டியலில் நம் பெயர் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாதா?                  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.


*இந்த இளைஞனைப் பற்றிச் சொன்னேன். நான் சந்தித்த வேறு ஒரு இளைஞனைப் பற்றி சொல்லவா? செழிப்பாக விளைந்திருந்தான் அந்த இளைஞன். ஒரு கூட்டத்தில் என்னிடத்தில் சம்பந்தமில்லாமல் கேள்விகள் கேட்டான். பொறுமையாக, தம்பி .... என்ன பண்றீங்க ?" என்று நான் கேட்டேன். "அப்பாவுக்கு உதவி ஒத்தாசையாக இருக்கிறேன்” என்றான்.


      *இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு இளைஞனா என்ற இன்ப அதிர்ச்சியுடன், "அப்பா என்ன பண்றார்?" என்றேன் "சும்மா வீட்ல இருக்கிறார்" என்று வெடிகுண்டு வீசினான் அந்த இளைஞன். தான் காலத்தை வீணாக்குகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாத இவன் எப்படி முன்னேற முடியும்?


   *இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? நம் குடும்பத்தின் நிலை என்ன?              நாம் வளர முன்னேற என்ன செய்யலாம் என்கிற சின்னச் சின்னக் கேள்விகள் உங்களுக்குள் பிறந்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் கிடைக்கத் தொடங்கும். ஒன்றை மறந்து விடாதீர்கள் எவ்வளவு பெரிய கதவுக்கும் தாழ்ப்பாள் சின்னது தான். பூட்டோ அதை விடச் சின்னது. சாவியோ பூட்டை விடச் சின்னது. சின்னச் சாவியால் பூட்டைத் திறக்கலாம் பூட்டைத் திறந்தால் தாழ்ப்பாளைத் திறக்கலாம். தாழ்ப்பாளைத் திறந்தால் பெரிய கதவுகளை சுலபமாகத் திறக்கலாம். எனவே சின்னச் சின்னக் கேள்விகள், பெரிய பெரிய கோட்டை வாய்களைத் திறக்கப் போகும் சாவிகள். இதை நீங்கள் உணர்ந்தால் வெற்றி நிச்சயம்.






 அனைவரும் கருத்துக்களை முழுமையும் தெரிந்து கொண்டதற்கு நன்றி.......






             கல்வி ஆசிரியர்கள்

























Post a Comment

0 Comments