காசு, பணம் வரும் போகும் ! ஆனால் கல்வி வரும் போகாது !! கல்வி ஆசிரியர்கள் சார்பாக வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம்.தங்களின் படைப்புகளை kalviasiriyarkal@gmail.com என்ற Mail id-க்கு (or) 9443771150 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.... நன்றி

தேர்வுக்கு முதல் நாள்- தேர்வு நேரத்தில் கண்கள் பத்திரம் மற்றும் தேர்வு எழுதும் போது ....


  *தேர்வுக்கு முதல் நாள்*


  *அதிகாலை நேரத்தில் எழுந்து படிப்பது மனதிலே ஆழமாக பதியும்.


 *காலையிலும் மற்ற நேரங்களிலும் குடிப்பதற்கு டீ, காபி போன்ற பானங்களைத் சற்று தவிர்த்து புதிய பழச்சாறு, சத்துபானம் ஆகியவற்றைக் குடிக்கவும்.


*அதிக அளவு மந்தத்தை ஏற்படுத்தும் உணவை தவிர்த்து சாலட் சுண்டல், பழங்கள், காய்கறிகள் இவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் எப்போதும் புத்துணர்ச்சியுடன், தெளிவாகவும் இருக்கும்.


*இரவில் அதிக நேரம் கண்விழித்து படிப்பதை தவிர்ப்பது நலம். அதனால் உடலும் மனமும் சோர்வடைந்து மறுநாள் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.


*தேர்வு நடக்கும் சமயத்தில் ஐஸ்கிரீம்,ஸ்வீட்ஸ் போன்றவற்றை தவிர்க்கவும். ஏனெனில் இதனால் சிலருக்கு சளி பிடித்து அவதிப்படக்கூடிய நிலை வரலாம்.


*கண்ணாடி அணியும் மாணவ, மாணவிகள் எனில் சற்று கவனத்துடன் இருந்து, தற்செயலாக கண்ணாடி கீழே விழுந்தோ தவறியோ உடைந்துவிடும் சந்தர்ப்பத்தில் மாற்றுக்கண்ணாடி வைத்திருப்பது அவசியம். இதனால் டென்சனும், நேரமும் குறையும்.


* பட்டினியாக இருந்து தேர்வு எழுத செல்வதை தவிர்க்கவும்.


*மறுநாள் தேர்விற்கு வேண்டிய பேனா, பென்சில், ஸ்கேல் மற்றும் அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் முதல் நாளே எடுத்து வைத்துக்கொள்ளவும்.


*தேர்வுகள் நெருங்குகின்ற சமயத்தில் இந்தக் கேள்வியைப் படிக்கவில்லையே, அதைப் படிக்கவில்லையே என்று பதட்டப்பட்டால் நன்கு படித்த பாடங்களே கூட மறந்து விடக்கூடும். எனவே பதட்டமின்றி தேர்வெழுதச்செல்லுங்கள்.


*தேர்வு நேரத்தில் கண்கள் பத்திரம் !*


* பார்வையில் இயல்புக்கு மாறாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் தேர்வுக்கு முன்பாகவே மருத்துவரைப் பார்த்து பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.


* உடம்பை நன்றாகத் தளர்த்தி சாய்ந்து உட்கார்ந்து படிப்பது நல்லது.            புத்தகம் உங்கள் விழிக்கு நேராக இருக்க வேண்டும்.                                          கழுத்தைத் திருப்பி சிரமப்பட்டு படிப்பது நல்லதல்ல.


* கண்கள் கூசம் அளவுக்கு வெளிச்சத்திலும் படிக்கக்கூடாது. குறைந்த வெளிச்சத்திலும் படிப்பது நல்லதல்ல.இரண்டுமே கண்களைச் சோர்வடையச் செய்யும்.


*படிக்கும் போது உங்கள் முகத்தில் வெளிச்சம் விழுவது நல்லதல்ல.     நீங்கள் படிக்கும் புத்தகத்தில் வெளிச்சம் விழும்படியாக அமர்ந்து படிக்க வேண்டும்.


*உங்கள் நிழல் நீங்கள் படிக்கும் புத்தகத்தின் மீது படிந்து மறைக்கவும் கூடாது. படுத்துக்கொண்டு படிக்கக் கூடாது. தரையிலோ நாற்காலியிலோ அமர்ந்துக்கொண்டு படிப்பதே சரியானது.


*ஒரே இடத்தை அல்லது புத்தகத்தின் ஒரே பக்கத்தை தொடர்ந்து வெறித்து பார்த்து கொண்டிருக்காதீர்கள். 


*அவ்வாறு பார்த்தால் கண்களில் இருக்கும் மென்மையான தசைகள் நரம்புகளுக்கு போதிய ரத்தம் கிடைக்காமல் போகலாம். மேலும்கண்ணீர்ச்சுரப்பிகள் வறண்டு போகவும் வாய்ப்புண்டு.


*புத்தகத்துக்கும் உங்களுக்கும் குறைந்தது ஆறில் இருந்து எட்டு அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். 


*ஓய்வில்லாமல் படிக்கும் போது கண்களில் சோர்வு ஏற்பட்டாலோ, கண்கள் கலங்கினாலோ சுத்தமான குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம். 


*தூக்கம் வரும்போது, சிரமப்பட்டு படிப்பது நல்லதல்ல. உறங்கி எழுந்துபடித்து பாருங்கள், உற்சாகத்தை நீங்களே உணர்வீர்கள்.



 *தேர்வு எழுதும் போது ....*


       *தேர்விற்கான பெல் அடிக்கும் வரை, தேர்வறைக்கு செல்லும் முன் புத்தகத்தை பிரித்து வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தீர்கள் எனில் பதட்டமே மிஞ்சம். எனவே ரிலாக்ஸாக தேர்வெழுதச் செல்லுங்கள்.


     *கேள்வித்தாளை வாங்கியவுடன் ஒரு முறை படித்துப் பார்த்துக்கொள்ளவும். இதனால் அவசரத்தில் எழுதும்போதும் நன்கு விடை தெரிந்த கேள்விக்கே பதில் எழுதாமல் போகும் சந்தர்ப்பம் தவிர்க்கப்படும்.


   *ஒரு சில கேள்விகளுக்கான பதிலின் முதல்வரி தெரியாமல் தவிக்கும் மாணவர்கள் ஏராளம். அதையே யோசித்துக் கொண்டு, தெரிந்த கேள்விகளுக்கான விடையையும் எழுத தவறி விடுவார்கள். தவறின்றி தெளிவாக விடை தெரிந்த கேள்விக்கே முதலில் விடையளிக்கவும்.


    *ஒவ்வொரு பதிலுக்கும் முன்பே அப்பதிலுக்குரிய கேள்வியின் எண்ணைத் தெளிவாக குறிப்பிடவும். பதிலை சரியாக எழுதி,கேள்வியின் எண்ணைத் தவறாக எழுதிவிட்டால் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது.

   *ஒவ்வொரு பதிலுக்கும் இடையே உரிய இடைவெளி விட்டு கோடிட்டு காட்ட வேண்டும்.


   *முக்கியமான குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும்.


     *தெளிவான கையெழுத்துடன்,    வரிக்கு வரி சீரான இடைவெளியில்     ஒரு பக்கத்திற்கு குறைந்தது 20 வரிகள் வருமாறு எழுதவேண்டும்.


   *அறிவியல் விதிகள், சூத்திரங்கள் தவிர்த்து ஏனைய வினாக்களுக்கான விடையை இயன்றவரை சொந்த நடையில் எழுதிப் பழகுங்கள்.


    *ஒவ்வொரு பதிலுக்கும் உரிய கால நிர்ணயத்தை செய்துக்கொண்டு குறித்த நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்று.








              *கல்வி ஆசிரியர்கள்*



















Post a Comment

0 Comments