தேர்வு நேரத்தில் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்:
*தேர்வு நேரத்தில் வீட்டில் மாணவர்களுக்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையை வீட்டில் ஏற்படுத்தவும்.
*தேர்வு நேரங்களில் ஒரு நாளில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை அவர்களுடன் நேரத்தை செலவிட்டு ஜாலியாகப் பேசி உற்சாகப்படுத்துங்கள்.
*ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பார். குழுவாகச் சேர்ந்து நன்றாக படிக்க முடியும் என்றும் உங்களது மகனோ / மகளோ விரும்பினால் அதற்கு அனுமதிக்கலாம்.
*குழுவாகப் படிக்கும் பொழுதுதான் அவர்களது சந்தேகங்களை நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்.
*தேர்வு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதையும், விளையாடுவதையும் முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டாம்.
*படிப்புக்கு இடையில் சிறிய இடைவெளி கட்டாயம் இருத்தல் வேண்டும். அது மாணவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
*தேர்வு நேரத்தில் சில மாணவர்கள் நீண்ட நேரம் கண் விழித்துப் படிப்பார்கள். அவர்கள் தினமும் இரண்டு மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குவது உடல்நிலையைப் பாதிக்கும்.
*மிகக் குறைவான நேரம் தூங்குவதை நமது உடல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஏற்றுக் கொள்ளும்.
*இதைத் தொடர்ந்தால், சோர்வாகவும், தூங்க வேண்டும் போலவும் இருக்கும்.
*அத்துடன் தலைவலியும், உடல்வலியும் இருக்கும் செரிமானம் இருக்காது.
*இதன் மூலம் எரிச்சலும், முன்கோபமும் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்படலாம்.
*தேர்வு நேரத்தில் தகுந்த தூக்கம் அவசியம் தேவை. நேரத்தில் தூங்குவதையும் உடற்பயிற்சி செய்வதையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
*இரண்டு பேரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் உங்களது குழந்தைத் தேர்வுக்குத் தயாராகும் போது, அனைத்து நேரமும் நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
*உங்களது எண்ணம் தவறானது இல்லை என்றாலும் கூட பெற்றோர்கள் தங்களை நம்பவில்லை, படிப்பதைக் கண்காணிப்பதற்காக வீட்டில் இருக்கிறார்கள் என்ற தவறான செய்தியை உங்களின் குழந்தையிடம் மறைமுகமாக தெரிவிக்கும் செயலாக அமைந்துவிடும்.
*படித்ததை எழுதிக் காட்டு என்று நீங்கள் கேட்கும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் மன அழுத்தத்துக்கும் கவலைக்கும் ஆளாகக்கூடும்.
*குழந்தைகள் தங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். குழந்தைகளின் பேச்சிலிருந்தும் அவர்களது அன்றாட நடத்தைகளிலிருந்தும் அவர்களது மன அழுத்தத்தை பெற்றோர்கள் கண்டறிய வேண்டியது அவசியம்.
*தேர்வுக்கு முந்தைய நாட்களில் மாணவர்கள், தாங்கள் படித்தது மறந்து போய் விட்டது என்றால் அதற்காகப் பதற்றப்பட வேண்டாம். மீண்டும் அமைதியாக சிந்தித்துப் பார்த்தால், படித்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்துவிடும் என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.
*முடிந்தவரை சிறப்பாகச் செய்ய சொல்லுங்கள் பாடங்களில் சந்தேகம் ஏதேனும் இருப்பின், ஆசிரியரிடம் விளக்கம் பெறச் சொல்லுங்கள்.
*தேர்வு குறித்த பயம் இருக்கும் பட்சத்தில் ஆசிரியர்களிடம் பேசினால் நம்பிக்கை வரும்.
நன்றி!
தகவலுக்கு:
கார்த்திக்.,
முதுகலை கணித ஆசிரியர்.,
திருப்பூர்.




2 Comments